குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

குப்பநத்தம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இதன் மூலம் 9 ஆயிரத்து 728 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

Update: 2018-02-21 22:15 GMT
செங்கம், 

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணைக்கு அடுத்ததாக மிகப்பெரிய அணையாக குப்பநத்தம் அணை விளங்குகிறது. செங்கம் அருகே உள்ள இந்த அணையின் முழு கொள்ளளவு 59.04 அடியாகும். தற்போது அணையில் 58.95 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 700 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 699.16 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவை மற்றும் அணை பராமரிப்புக்கு 180.95 மில்லியன் கன அடி தண்ணீர் தேவையாக உள்ளது. அணையில் மீதம் உள்ள பாசனத்திற்கான நீர் இருப்பு 518.21 மில்லியன் கன அடியாகும்.

தற்போது சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் குப்பநத்தம் அணையிலிருந்தும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என செங்கம், கலசபாக்கம் வட்டார விவசாயிகள் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி அணையில் தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் உதயகுமார், அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் ராஜன், நகர செயலாளர் செல்வம், செயற்பொறியாளர் கோவிந்தராஜன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், செங்கம் உதவி பொறியாளர் ராஜாமணி, இளநிலை பொறியாளர் ரவிசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன் மூலம் செங்கம் மற்றும் கலசபாக்கம் தாலுகாக்களில் உள்ள 9 ஆயிரத்து 728 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தம் 25 நாட்களுக்கு தொடர்ந்து ஒரே தவணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பாசன நீரை சிக்கனமாகவும், துறை பணியாளர்களின் ஆலோசனைப்படி சிறந்த முறையில் சிக்கனமாக பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும், ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்