12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சோலாப்பூரில் வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் பரவியதால் பரபரப்பு உண்டானது.

Update: 2018-02-21 22:50 GMT
மும்பை,

மராட்டியத்தில் எச்.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. கேள்வித்தாள் வெளியாவதை தடுப்பதற்காக மாநில உயர் மற்றும் மேல்நிலை கல்வி வாரியம் மாணவ, மாணவிகள் மற்றும் தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.

முதல் தேர்வாக நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. தேர்வு காலை 11 மணிக்கு தொடங்கியது. 11 மணிக்கு பின்னர் வரும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வந்து இருந்தனர்.

தேர்வு எழுத வந்திருந்த மாணவ, மாணவிகள் பலர் தேர்வு மையங்களுக்கு செல்போன்களை கொண்டு வந்திருந்தனர். தேர்வறைக்குள் கொண்டு செல்லக்கூடாது என்பதால் செல்போன்கள் அனைத்தும் தேர்வு மைய வளாகத்திலேயே வாங்கி வைக்கப்பட்டன. மேலும் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், சோலாப்பூர் பார்சி தாலுகாவில் தாம்பேவாடி அரசு பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில், மதியம் 12 மணியளவில் திடீரென அந்த பகுதியை சேர்ந்தவர்களின் வாட்ஸ்-அப் குரூப்களில் ஆங்கில தேர்வு வினாத்தாள் வேகமாக பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்