அரியலூரில் சாலை பணிகள் தொடங்கின

அரியலூர் நகராட்சியில் உள்ள பல தெருக்களில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

Update: 2018-02-21 22:00 GMT
அரியலூர்,

அரியலூர் ரெயில் நிலைத்திற்கு செல்லும் ராஜாஜிநகர்சாலை, கீரைக்காரதெரு, சந்தனமாதா கோவில் தெரு ஆகிய தெருக்களில் உள்ள சாலைகள் பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டது. பின்னர் அந்த சாலைகள் அகலப்படுத்தப்பட்டு ஜல்லி கற்கள் பரப்பி வைக்கப்பட்டன.

அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால் ரெயில் நிலையத்திற்கு கார், பஸ், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேலும் அந்த சாலைகளில் ஜல்லிகற்களை பரப்பி வைத்தப்படி 2 மாதங்களாக பணி நடக்காமல் இருந்தன. இதே போன்று சிங்காரதெரு, பெரியார்நகர், மேலஅக்ரகாரம், விளங்காரதெரு, செல்லமுத்தநாயக்கர்தெரு ஆகிய இடங்களிலும் சாலையில் ஜல்லிகற்களை போட்டு வைத்தடி அப்படியே இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

 மேலும் அரியலூர் ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட இடங்களில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணியை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தது குறித்து கடந்த 16-ந்தேதி தினத்தந்தியில் சுட்டிகாட்டப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக நேற்று ராஜாஜிநகர்-அரியலூர் ரெயில் நிலைய சாலையில் எந்திரங்கள் மூலம் தார்கலவை கொட்டப்பட்டு பணிகள் தொடங்கி துரிதமாக நடந்து வருகின்றன. இதற்கு பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்