வாய்க்கால் பராமரிப்புக்காக தண்ணீர் நிறுத்தப்படுவதை தள்ளிவைக்க வேண்டும்

வாய்க்கால்கள் பராமரிப்பிற்காக தண்ணீர் நிறுத்தப்படுவது ஒருமாத காலம் தள்ளிவைக்க வேண்டும் என பரமத்திவேலூரில் நடந்த வாய்க்கால் பாசன விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

Update: 2018-02-21 22:00 GMT
பரமத்திவேலூர்,

பரமத்தி வேலூரில் ராஜா, குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்கால்களின் பாசன விவசாயிகள் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வாய்க்கால் பாசன விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்திற்கு திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, பொதுப்பணித்துறை சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் கவுதமன், உதவி செயற்பொறியாளர் முரளி, பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் ராஜா, குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்கால்களின் பாசன விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வழியுறுத்தி பேசினார்கள். அப்போது அவர்கள் பேசியதாவது:-

வாய்க்கால்களின் பராமரிப்பிற்காக தண்ணீர் நிறுத்தப்படுவது ஒருமாத காலம் தள்ளிவைக்க வேண்டும். பரமத்தி வேலூர் பகுதி, விவசாயத்தை மையமாக கொண்ட பகுதி. இங்குள்ள விவசாயத்திற்கு முக்கியமான நீராதாரமாக விளங்குவது ராஜா, பொய்யேரி, குமாரபாளையம் மற்றும் மோகனூர் வாய்க்கால்களாகும். இந்த வாய்க்கால்கள் மூலம் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் காவிரி தண்ணீர் இல்லாமல் போனதால், வாய்க்கால்களிலும் தண்ணீரின்றி வாய்க்கால் பாசனத்தை நமபி இருந்த வெற்றிலை, கரும்பு, வாழை, கோரை, நெல் மற்றும் மரவள்ளி கிழங்கு பயிர் செய்திருந்த விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மீண்டும் பயிர் செய்துள்ளனர். வாய்க்கால்களின் பராமரிப்புக்காக ஆண்டு தோறும் மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை தண்ணீர் நிறுத்தப்பட்டு வாய்க்கால் தூர்வாரப்படுவது வழக்கம். தற்போது பயிர்செய்துள்ள பயிர்கள் வளரும் பருவத்தில் உள்ளதால் பராமரிப்பிற்காக வாய்க்கால்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் பயிர்கள் கருகி விடும் நிலை ஏற்படும்.

எனவே பராமரிப்பிற்காக தண்ணீர் நிறுத்தப்படுவதை 40 நாட்கள் வரை தள்ளிவைக்க வேண்டும். கோடையில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய முறைவைத்து தண்ணீர் பாய்ச்சுவதை நடைமுறைபடுத்த வேண்டும்.

வறட்சி காலங்களில் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் இருந்து ராஜா வாய்க்காலில் கலக்கும் சாக்கடை கழிவுநீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்படும் சூழ்நிலையும், பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. எனவே சாக்கடை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து வாய்க்காலில் விடவேண்டும்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர். கூட்டத்தில் பரமத்தி வேலூர் தாசில்தார் ருக்குமணி, பரமத்தி வேலூர் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் வினோத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்