சி.டி. கடைக்காரரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு கைது

சி.டி. கடைக்காரரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-21 23:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 31). இவர் சிவகாசியில் சி.டி. கடை வைத்துள்ளார். இவரது கடையில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் கமலி கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தி திருட்டு சி.டி.க்களை பறிமுதல் செய்தார். இதைதொடர்ந்து பிரகாஷிடம் தொடர்ந்து சி.டி. வியாபாரம் நடத்திட, சோதனை நடத்தாமல் இருக்க மாதம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என இன்ஸ்பெக்டர் கமலி கேட்டுள்ளார்.

மாதம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர விருப்பமில்லாத பிரகாஷ், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இது பற்றி தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரகாஷை ரூ.5 ஆயிரத்துடன் விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி காவேரி தெருவில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு சென்று கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி நேற்று பிரகாஷ் அந்த போலீஸ் அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு இன்ஸ்பெக்டர் கமலி மற்றும் போலீஸ் ஏட்டு முருகேசன் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் தனது கடையில் சோதனை நடத்தாமல் இருக்க நீங்கள் கேட்டபடி ரூ.5 ஆயிரம் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கமலி ரூ.5 ஆயிரத்தை ஏட்டு முருகேசனிடம் கொடுக்குமாறு கூறினார். அதன்படி முருகேசனிடம் பிரகாஷ் பணத்தை கொடுத்தார். முருகேசனும் பணத்தை பெற்றுக் கொண்டு இனி தொந்தரவு இருக்காது என பிரகாஷிடம் தெரிவித்தார்.

அப்போது அந்த அலுவலகம் அருகே பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், இன்ஸ்பெக்டர்கள் விஜயகாண்டீபன், பூமிநாதன் ஆகியோர் அலுவலகத்திற்குள் விரைந்து சென்று ஏட்டு முருகேசனை பிடித்து ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இன்ஸ்பெக்டர் கமலி அறிவுறுத்தலின்பேரிலேயே லஞ்சப்பணத்தை பெற்றதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் கமலி(வயது 43), ஏட்டு முருகேசன்(45) ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கைதான இன்ஸ்பெக்டர் கமலி மதுரை கண்ணனேந்தலை சேர்ந்தவர். இதற்கு முன்பு அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் பணியாற்றினார். போலீஸ் ஏட்டு முருகேசன் பரமக்குடியை சேர்ந்தவர். சமீபத்தில் தான் இந்த பிரிவிற்கு மாறுதலாகி வந்துள்ளார். இன்ஸ்பெக்டர் கமலி, ஏட்டு முருகேசனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்