திருச்சியில் ஏர்செல் செல்போன் சேவை முடங்கியது

திருச்சியில் ஏர்செல் செல்போன் சேவை முடங்கியது. இதனால் அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-21 22:30 GMT
திருச்சி,

கடந்த சில நாட்களாகவே ஏர்செல் செல்போன் டவர் சரியாக கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று திருச்சி மாநகர் பகுதி முழுவதும் ஏர்செல் டவர் கிடைக்காததால் அதன் சேவை அடியோடு முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியாமல் கடும் அவதிப்பட்டனர். குறுஞ்செய்தி கூட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் நேற்று காலை 10 மணி அளவில் திருச்சி வெஸ்ட்ரி ரவுண்டானா பகுதியில் உள்ள ஏர்செல் சேவை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அங்கிருந்த ஊழியர்களிடம் கடந்த சில நாட்களாகவே டவர் கிடைக்கவில்லை. ஏன் என்று கேட்டால் சரியாகி விடும் என்று மட்டும் கூறுகிறீர்கள். ஆனால் இன்னும் சரியாகவில்லை என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள் கூறுகையில் ஏர்செல் டவர் கிடைக்காததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. மகன், மகள், உறவினர்களை கூட தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இதனால் எங்களது வியாபாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எப்போது கேட்டாலும் 24 மணி நேரத்தில் டவர் சரியாகி விடும் என்று தான் கூறுகின்றனர். எனவே வேறு நிறுவனத்திற்கு தற்போது வைத்து இருக்கும் அதே எண்ணை மாற்றி கொடுக்க வேண்டும். நாங்கள் கட்டிய பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறினர்.

இது குறித்த தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த வாடிக்கையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் டவர் சரியாகி விடும் என்று ஏர்செல் அலுவலக ஊழியர்கள் எழுதி வைத்தனர். இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் நேற்று மாலை வரை வாடிக்கையாளர்கள் ஏர்செல் அலுவலகத்திற்கு வாடிக்கையாளர்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் ஏர்செல் அலுவலகத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்