கோவையில் தனியார் செல்போன் நிறுவன அலுவலகம் முற்றுகை

சேவை பாதிக்கப்பட்டதால், கோவையில் உள்ள தனியார் செல்போன் நிறுவன அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-02-21 22:15 GMT
கோவை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘ஏர்செல்’ செல்போன் சேவையில் கடந்த சில நாட்களாகவே பாதிப்பு இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பெரும்பாலான டவர்கள் இயங்காததால், ‘சிக்னல்’ கிடைக்காமல் ‘ஏர்செல்’ சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் செல்போன் மூலம் மற்றவர்களிடம் பேச முடி யாமலும், அழைப்புகளை ஏற்க முடியாமலும் பொதுமக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். செல்போன் மூலம் முக்கிய தகவல்கள், அவசர செய்திகள் பரிமாறப்படும் சூழ்நிலையில், ‘ஏர்செல்’ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும், அலுவலக ஊழியர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள ஏர்செல் மையங்களுக்கு பொதுமக்கள் சென்று முறையிட்டனர். எனினும் முறையான விளக்கம் கிடைக்காததால் ஊழியர்களுடன் வாக்குவாதமும் நடந்தது.

‘ஏர்செல்’ சேவை முடங்கியது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் சங்கரநாராயணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள 9 ஆயிரம் டவர்களில் வாடகை பிரச்சினையால் 6 ஆயிரத்து 500 டவர்களுடைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் மற்ற செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாறுவதற்கு விண்ணப்பம் செய்து உள்ளனர். அதன்படி இன்று(நேற்று) மட்டும் 8 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். ஏர்செல் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்

கோவை உள்பட பல்வேறு இடங்களில் ‘ஏர்செல்’ நிறுவனத்தின் செல்போன் சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை சேவை மேலும் பாதிக்கப்பட்டு செல்போன் மற்றும் இணையதள தொடர்பு முடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள், கோவை ஹுசூர் ரோட்டில் உள்ள ஏர்செல் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, ‘செல்போன் நிறுவன சேவை பிரச்சினையை முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை?’ என்று வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்தனர். மாதாந்திர திட்டத்தில் சேர்ந்தவர்கள் வைப்புத்தொகையை திரும்ப தருமாறு வற்புறுத்தினார்கள். ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு செல்போன் நிறுவனத்தினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள்.

அதற்கு அவர்கள் ‘தாங்கள் குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்தின் ஏஜெண்டு மட்டுமே. எனவே முழுமையான விளக்கத்தை தங்களால் தெரிவிக்க இயலாது’ என்றனர். இதனால் நீண்டநேர முற்றுகைக்கு பிறகு வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.

அப்போது ஏர்செல் வாடிக்கையாளர்கள், நெட்ஒர்க் பாதிப்பால் வேறு செல்போன் நிறுவனங்களை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். வேறு எந்த ஒரு செல்போன் நிறுவனத்துக்கு மாறும் திட்டத்தின் கீழ் 1900 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ரகசிய எண்ணை பெற்று, அதை மற்றொரு நிறுவனத்தில் இணைய முடிவு செய்து உள்ளதாக கூறினர்.

மேலும் செய்திகள்