பிரபல புரோட்டா கடை அதிபர் வீடு–அலுவலகங்களில் வருமான வரி சோதனை செங்கோட்டையில் பரபரப்பு

செங்கோட்டையில் பிரபல புரோட்டா கடை அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2018-02-21 20:30 GMT
செங்கோட்டை,

செங்கோட்டையில் பிரபல புரோட்டா கடை அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வருமான வரி சோதனை


நெல்லை மாவட்டம் செங்கோட்டை பிரானூர் பார்டரில் உள்ள ரஹ்மத் புரோட்டா கடை பிரபலமானது. இந்த கடையில் உள்ள அலுவலகத்தில் நேற்று வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். நெல்லை, மதுரை, குமரி, கொல்லம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் வல்லம் கிராமத்தில் உள்ள புரோட்டா கடை அதிபர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

பரபரப்பு


இந்த வருமான வரி சோதனை காரணமாக புரோட்டா கடையில் நேற்று விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த சோதனை காரணமாக அங்கு நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரானூர் பார்டரில் உள்ள மரம் அறுவை ஆலைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்