கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் 3,593 விவசாயிகள் தற்கொலை

கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3,593 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக சட்டசபையில் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Update: 2018-02-20 23:06 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியதாவது:–

சித்தராமையா முதல்–மந்திரி பதவியில் இருக்கும்போது 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். மொத்தமாக அவர் 13 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து இருக்கிறார். இதற்கு முன்பு முன்னாள் முதல்–மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டே 13 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். அவருக்கு இணையாக சித்தராமையாவும் 13 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து அந்த பெருமையை பெற்றுள்ளார்.

சித்தராமையா பட்ஜெட் புத்தகத்தை 4 மணி நேரம் வாசித்தார். அதில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு உள்ளார். ஆனால் புதிதாக ஒன்றும் இல்லை. இது கடைசி பட்ஜெட் என்பதால் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் நல்ல திட்டங்கள் இடம் பெறும் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அவ்வாறு எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

இந்த அரசுக்கு இன்னும் 2 மாதங்கள் தான் காலஅவகாசம் உள்ளது. அதிலும் மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது. பா.ஜனதா ஆட்சி தான் அமையும்.

சித்தராமையா ரூ.8,600 கோடிக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். இது போதாது. ஒரு விவசாயிக்கு ரூ.1 லட்சம் வரை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரினோம். ஆனால் சித்தராமையா ரூ.50 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்தார். கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இதுவரை ரூ.2,600 கோடி மட்டுமே கூட்டுறவு சங்கங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு செலுத்தப்படும்.

உத்தரபிரதேச அரசு தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனையும் தள்ளுபடி செய்தது. அதே போல் கர்நாடக அரசும் தேசிய வங்கி விவசாய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி இருப்பதாக இந்த அரசு பெருமையுடன் சொல்லிக்கொள்கிறது. ஆனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் இன்னும் நின்றபாடில்லை.

நேற்று(அதாவது நேற்று முன்தினம்) கூட கலபுரகியில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3,593 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் அரசின் உதவிகள் 1,166 விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. விவசாயிகள் தற்கொலையில் நாட்டிலேயே கர்நாடகம் 2–வது இடத்தில் உள்ளது. இது மக்கள் விரோத, விவசாயிகள் விரோத அரசு.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் பேசினார்.

மேலும் செய்திகள்