சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி; கிலோ ரூ.25-க்கு விற்பனை

பெரம்பலூர் மாவட்டத்தில், சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. ஒரு கிலோ ரூ.25, ரூ.30-க்கு விற் பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2018-02-20 22:30 GMT
பெரம்பலூர்,

சின்ன வெங்காய சாகுபடியில் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில், எளம்பலூர், சத்திரமனை, வேலூர், செட்டிக்குளம், அம்மாபாளையம், களரம்பட்டி, எசனை, பொம்மனப்பாடி, மங்கூன், சிறுவயலூர், குரூர், இரூர், பாடாலூர் உள்ளிட்ட கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும் பயனற்ற நிலையிலிருக்கும் செட்டிக்குளம் வெங்காய சேமிப்பு கிடங்கை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப் படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

சாம்பாருக்கு அத்தியாவசியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாகவும் சின்ன வெங்காயம் இருப்பதால் பெரம்பலூரிலிருந்து திருச்சி, மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் வியாபாரிகளும் நேரடியாக பெரம்பலூரில் சின்ன வெங்காய வயலுக்கு வந்து அதனை கொள்முதல் செய்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் சின்ன வெங்காயத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ரூ.150-க்கு விற்பனையானது. அந்த சமயத்தில் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி குறைவாக இருந்ததாலும், வியாபாரிகள் நேரடி கொள்முதலில் ஆர்வத்துடன் ஈடுபட்டதாலும் இந்த விலையேற்றத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓரளவு மழை பெறப்பட்டதால் அதனை பயன்படுத்தி சின்ன வெங்காயம் பயிரிடும் பணியை விவசாயிகள் ஆர்வத்துடன் தொடங்கினர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து (தை பட்டம்) சின்ன வெங்காயம் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் 2,500 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்படுவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தற்போது பகலில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஆனால் மாறாக இரவில் கடும் பனிப்பொழிவு உள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தால் வயலில் உள்ள சின்னவெங்காயத்தில் வேரழுகல் நோய் தாக்குவதாக விவசாயிகள் கூறுகின்றனர். கொத்து கொத்தாக பட்டறையில் சின்ன வெங்காயத்தை கட்டி வைக்கும் போது, ஒரு வேரழுகல் நோய் தாக்கிய வெங்காயம் உள்ளே இருந்தால் கூட மொத்த வெங்காயத்தையும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளி விடு கிறது. இதன் காரணமாக அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை சீக்கிரமாக விற்பனை செய்திட வேண்டும் என்கிற நோக்கில் விவசாயிகள் நேரடியாகவே மார்க்கெட், உழவர்சந்தை, பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு வாரசந்தை உள்ளிட்டவற்றுக்கு கொண்டு வந்து விற்கின்றனர்.

மேலும் பெரம்பலூர் பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம், துறையூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் குவித்து வைத்தும் விற்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். “காலம் மாறினால் காட்சியும் மாறும்” என்பதை போல் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்ற சின்ன வெங்காயம் ரூ.25, ரூ.30-க்கு தற்போது விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விதை வெங்காயம் ரூ.30-லிருந்து ரூ.50 வரை விற்பனையாகிறது. உற்பத்தி அதிகமானதால் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையை உண்டாக்கியிருப்பதால் தமிழக அரசு உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சியடைந்தது குறித்து, பெரம்பலூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் கூறுகையில், விவசாய விளைபொருளின் உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறைவதும், உற்பத்தி குறையும் போது விலை ஏற்றம் காண்பதும் வழக்கமானது தான். அந்த வகையில், தான் தற்போது பெரம்பலூரில் சின்ன வெங்காயம் உற்பத்தி அதிகரித்து விட்டதால் விலை வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி, கடலை, மஞ்சள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்கிறது. அதனை கொள் முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் சின்ன வெங்காயம் அழுகும் பொருள் என்பதால் விலை நிர்ணய பட்டியலில் அது இடம்பெறவில்லை. அதனால் அரசு சார்பில் கொள்முதலும் செய்யப்படவில்லை. எனவே சின்ன வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும். விலை வீழ்ச்சி ஏற்படும் போது தமிழக அரசே அதனை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பதுக்கலை தடுக்கலாம். செட்டிக்குளம் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டுக்கு வருமா?

சின்ன வெங்காயம் உற்பத்தி அதிகமாகும் போது அதனை சேமிக்க குளிர்பதன கிடங்கு பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது மூடப்பட்டு விட்டது. எனவே இதுகுறித்து உரிய ஆய்வு செய்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு செட்டிக்குளத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மூலமாக விவசாயிகள் கொண்டுவரும் சின்னவெங்காயத்தை எவ்வித கட்டணமும் இன்றி வியாபாரிகளை அங்கு வரவழைத்து விற்று கொடுத்தனர். அதை தற்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்