தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள், தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்தக்கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-02-20 21:45 GMT
திருச்சி,

திருச்சி பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் விக்னேஷ் ஓட்டல் அருகில் நேற்று தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தேசிய நெஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் ரிலையன்ஸ் மற்றும் ஏஆர். டோல்வேய்ஸ் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவி தலைமை தாங்கினார். ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி ரவி பேசியதாவது:- தேசிய நெடுஞ் சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் அவற்றில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்ட விதிகளை முறையாக அமல்படுத்துவது இல்லை. தொழிற்சங்கம் அமைத்தவர் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இது இயற்கை நீதி கோட்பாடுக்கு எதிரானதாகும். இவற்றில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுப்பு வழங்கப்படுவது இல்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் அரசு விதிமுறைப்படி தொழிலாளர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் வழங்கவேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் துவாக்குடி, பூதகுடி, கரூர் அரவக்குறிச்சி, திருமயம் லேனா விளக்கு, ஆத்தூர் தூத்துக்குடி, செங்குறிச்சி, லெட்சுமணப்பட்டி, மதுரை எலியார் பத்தி ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்