ரூ.19 கோடி செலவில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலை விரிவாக்க பணி தீவிரம்

ரூ.19 கோடி செலவில் பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலை விரிவாக்க பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

Update: 2018-02-19 22:45 GMT
பெரம்பலூர்,

தஞ்சையில் இருந்து அரியலூர், பெரம்பலூர், வீரகனூர், ஆத்தூர், வாழப்பாடி வழியாக சேலத்திற்கும், எதிர் திசையில் சேலத்தில் இருந்து தஞ்சாவூருக்கும் விரைவு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். பெரம்பலூரில் இருந்து வீரகனூர், தலைவாசல் வழியாக சேலம் சென்று வரும் வாகனங்களின் போக்குவரத்தும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அரியலூரில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றி சேலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. லாரிகளில் பல டன் சிமெண்டு மூட்டைகள் கொண்டு செல்லப்படுகிறது.

சிமெண்டு தயாரிப்பதற்கு முக்கிய மூலப்பொருளான ப்ளை ஆஷ் சேலத்தில் இருந்து டேங்கர் லாரிகளில் அரியலூருக்கு கொண்டு வரப்படு கிறது. ஆத்தூர் பகுதியில் விளையும் பருத்தி பெரம்பலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டிக்கு ஏலத்திற்கும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு இங்குள்ள சர்க்கரை ஆலைக்கும் எடுத்துவரப்படுகின்றன.

பெரம்பலூரில் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள், பெரம்பலூர்- வீரகனூர்-தலைவாசல் சாலையை பயன்படுத்தி வருவதால் இந்த சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் பெரம்பலூர், அரியலூர் பகுதி மக்கள் தங்களது தொழில்-வியாபாரம், பணி நிமித்தமாக ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூரு செல்வதற்கும், ஏற்காடு செல்வதற்கும் பெரம்பலூர்-தலைவாசல் இடையே 44 கி.மீ. தூர சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை வாகன போக்குவரத்துக்கு பெரிதும் பயன்பட்டாலும், பல இடங்களில் குறுகலாகவே இருந்துள்ளது. இதனை விரிவுபடுத்திடவும், பெரம்பலூர்-ஆத்தூர் சாலையையும் விரிவுபடுத்திடவும் மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.19 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியைக்கொண்டு கோனேரிபாளையம் முதல் உடும்பியம் வரை அகலமாக உள்ள இடங்கள் தவிர ஏனைய இடங்களில் மொத்தம் 14.6 கி.மீ. தூரத்திற்கு விரிவாக்கம் செய்யும் பணி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி தீவிரமாக நடந்துவருகிறது. தற்போது வேப்பந்தட்டை, கோனேரிபாளையம் பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டுமான பணிகளும், எசனை ஏரிக்கரையில் குறுகலான வளைவுகளில் தடுப்புச்சுவர் எழுப்பி 7 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் வருகிற ஜூன் மாதம் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெரம்பலூர்-தஞ்சை- மானாமதுரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு மத்திய அரசு ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில் பெரம்பலூர்- மானாமதுரை சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர்-ஆத்தூர் சாலையும் தேசிய நெடுஞ்சாலையாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்