திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2018-02-18 22:15 GMT
திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றில் முக்கிய திருவிழாவான மாசி திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

10-ம் திருநாளான அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவில் சுவாமி- அம்பாள் பெரிய பல்லக்குகளில் திருவீதி உலா நடக்கிறது.

11-ம் திருநாளான 2-ந் தேதி மாலையில் மேல கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் எழுந்தருளி, சன்னதி தெரு யாதவர் மண்டபத்தில் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவில் சுவாமி- அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக தெப்பக்குள மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப திருவிழா நடக்கிறது.

12-ம் திருநாளான 3-ந் தேதி மாலையில் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி- அம்பாள் எட்டு வீதிகளிலும் வலம் வந்து, வடக்கு ரத வீதி 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபத்தை சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவில் சுவாமி- அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று, கோவிலை சேர்கிறார்கள்.

விழா நாட்களில் தினமும் கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பட்டிமன்றம், திருமுறை இன்னிசை, கலைநிகழ்ச்சி போன்றவை நடைபெறும்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்