பட்டதாரி வாலிபரை கொடூரமாக தாக்கிய, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகனுக்கு வலைவீச்சு

பெங்களூருவில் பட்டதாரி வாலிபரை கொடூரமாக தாக்கிய, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் முகமது ஹாரீஸ் நலபட்டை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுதொடர்பாக எம்.எல்.ஏ.வின் மகனின் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-18 23:15 GMT
பெங்களூரு,

பெங்களூரு டாலர்ஸ் காலனியில் வசித்து வருபவர் லோகநாத், தொழில்அதிபர். இவரது மகன் வித்வத். இவர், எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். நேற்று முன்தினம் இரவு கப்பன்பார்க் அருகே உள்ள வணிக வளாகத்தில் இருக்கும் ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக வித்வத் தனது நண்பர்களுடன் சென்றார். அப்போது அதே ஓட்டலில் பெங்களூரு சாந்திநகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஹாரீசின் மகன் முகமது ஹாரீஸ் நலபட் தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக முகமது ஹாரீஸ் நலபட் மீது வித்வத்தின் கால் பட்டுவிட்டது. இதுபற்றி வித்வத்திடம் முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவரது நண்பர்கள் கேட்டு தகராறு செய்தார்கள். உடனே தான் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் காலில் பலமாக அடிபட்டு இருப்பதாகவும், இதனால் தனது கால்களை அசைத்த போது தெரியாமல் பட்டு விட்டதாகவும் வித்வத் கூறினார். இதனை ஏற்க முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவரது நண்பர்கள் மறுத்து விட்டார்கள்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே திடீரென்று ஆத்திரமடைந்த முகமது ஹாரீஸ் நலபட்டும், அவரது நண்பர்களும் சேர்ந்து வித்வத்தை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஓட்டலில் இருந்து வெளியே இழுத்து வந்தும் அவரை கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது. இதில், வித்வத்துக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவரது முகம் முழுவதும் வீங்கியதுடன், அவரால் பேச முடியாமல் போனது. பின்னர் வித்வத்தை, அவரது நண்பர்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு முகமது ஹாரீஸ் நலபட்டும், அவரது நண்பர்களும் வந்து வித்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த வித்வத்தின் சகோதரரிடமும் சண்டை போட்டதுடன், அவரையும் தாக்க முயன்றதாக தெரிகிறது. பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் வித்வத் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் போலீசார் தங்களை தேட ஆரம்பித்தது பற்றி அறிந்ததும் முகமது ஹாரீஸ் நலபட்டும், அவரது நண்பர்களும் தலைமறைவாகி விட்டார்கள்.

இதற்கிடையில், நேற்று காலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வின் மகன் என்பதால், பட்டதாரி வாலிபர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாகவும், எம்.எல்.ஏ.வின் மகன், அவரது நண்பர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யாமல், சாதாரண சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், தலைமறைவாக உள்ள முகமது ஹாரீஸ் நலபட்டை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வித்வத்தின் தந்தையும், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் குற்றச்சாட்டுகள் கூறின.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் சுனில்குமாருக்கு முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து, முகமது ஹாரீஸ் நலபட் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்ய கப்பன்பார்க் உதவி போலீஸ் கமிஷனர் மஞ்சுநாத் தல்வார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார்கள்.

அதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வித்வத்தை சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.கே.சிங் நேரில் சந்தித்து பேசினார். சம்பவம் குறித்து அவரிடம் முழு விவரங்களையும் பி.கே.சிங் கேட்டு அறிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். பின்னர் வணிகவளாகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தார்கள்.

அந்த காட்சிகளில் பதிவான ஆதாரங்கள் மூலம் நேற்று மாலையில் வித்வத்தை தாக்கியதாக முகமது ஹாரீஸ் நலபட்டின் நண்பர்களான மஞ்சுநாத், அபிஷேக், அருண், பாலகிருஷ்ணா, நசீம் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

முன்னதாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வித்வத்தை போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வித்வத்தின் தந்தையிடம் மந்திரி ராமலிங்கரெட்டி உறுதி அளித்தார். இந்த நிலையில், வித்வத் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், முகமது ஹாரீஸ் நலபட்டை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அசோக்நகர் அருகே உள்ள ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் வீட்டு முன்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களும், வித்வத் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை முன்பாக பா.ஜனதா கட்சியினரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

உடனே போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதானமாக பேசி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பட்டதாரி வாலிபர் மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்