தொழிலாளி அடித்துக் கொலை

களக்காடு அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். சீட்டு விளையாடிய தகராறில் தீர்த்துக்கட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-18 22:00 GMT
களக்காடு,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர்கள் மாடசாமி (வயது 45), சின்னப்பாண்டி. இவர்கள் இருவரும் பூ கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் வாழை நார் விற்பனை செய்யும் தொழிலாளர்கள்.

இவர்கள் களக்காடு பகுதியில் வாழை நார் சேகரித்து அதனை சங்கரன்கோவில் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம். அதற்காக களக்காடு அருகே உள்ள தம்பிதோப்பு இந்திராநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

தொழிலாளர்கள் இருவரும் நேற்று இரவு மதுபோதையில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த சின்னப்பாண்டி அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் மாடசாமியை சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த மாடசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாடசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பாண்டியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்