நாக்பூரில் பத்திரிகை நிருபரின் தாய், மகள் கொலை, ஒருவர் கைது

நாக்பூரை சேர்ந்த பத்திரிகை நிருபரின் தாய், மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2018-02-18 21:15 GMT
நாக்பூர்,

நாக்பூரை சேர்ந்த குற்றப்பிரிவு பத்திரிகை நிருபர் ரவிகாந்த் காம்ப்லே. இவருடைய தாய் உஷா காம்ப்லே (வயது 60) மற்றும் 1½ வயது பெண் குழந்தை ராசி. இருவரும் நேற்று முன்தினம் மாலை திடீரென வீட்டில் இருந்து மாயமாகினர். அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் ரவிகாந்த் காம்ப்லேவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அவரது தாய் மற்றும் குழந்தையை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஹட்கேஸ்வர் பகுதியில் உள்ள பஹாதுரா கால்வாய் அருகே மர்ம மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் குழந்தையும், மூதாட்டியும் பிணமாக கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மாயமான ரவிகாந்த் காம்ப்லேவின் தாய் உஷா காம்ப்லே மற்றும் மகள் ராசி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் நடத்திய விசாரணையில் பவன்புத்ரா நகரை சேர்ந்த கணேஷ் ராம்பரன்(வயது 26) என்பவர் அவர்களை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். ரவிகாந்த் காம்ப்லேவின் வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்