மும்பை துறைமுகத்தில் 4-வது கன்டெய்னர் முனையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

மும்பை துறைமுகத்தில் 4-வது கன்டெய்னர் முனையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Update: 2018-02-18 23:30 GMT
மும்பை,

மும்பையை அடுத்த நவிமும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் 4-வது கன்டெய்னர் முனையம் அமைப்பதற்கான பணியை கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இதனை அமைப்பதற்கான பணியை முடிக்க 30 ஆண்டுகள் அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த போதிலும் பணிகள் முழுவீச்சில் நடந்தது.

இதையடுத்து 4-வது கன்டெய்னர் முனையத்துக்கான முதல்கட்ட பணிகள் 3 ஆண்டுகளில் முடிந்துள்ளது. இந்த பணிகள் ரூ.4 ஆயிரத்து 719 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜவஹர்லால் நேரு துறைமுக 4-வது கன்டெய்னர் முனையத்தின் முதல் கட்ட திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா, நவிமும்பை சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழா, மும்பையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று மும்பை வந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் ஜவஹர்லால் நேரு துறைமுகம் சென்ற பிரதமர் மோடி, அங்கு 4-வது கன்டெய்னர் முனையத்தின் முதலாவது திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இதைத்தொடர்ந்து அவர் பேசும்போது, “உலகமயமாக்கப்பட்ட பூமியில் நமக்கான பகுதியை நாமே செதுக்கி கொள்ளவேண்டும். நீர் வழிப்போக்குவரத்தை பெருக்கி கொள்ளவேண்டும்” என்றார்.

நாட்டில் அதிகளவு கன்டெய்னர்களை கையாளும் துறைமுகமாக ஜவஹர்லால் நேரு துறைமுகம் திகழ்கிறது. மேலும் இது அதிக கன்டெய்னர்களை கையாளுவதில் உலகிலேயே 33-வது பெரிய துறைமுகமாகவும் விளங்குகிறது.

இந்த துறைமுகத்தில் இதுவரை ஆண்டுக்கு 40 லட்சத்து 80 ஆயிரம் கன்டெய்னர்கள் கையாளப்பட்டு வந்தன. தற்போது புதிதாக திறந்து வைக்கப்பட்டு உள்ள முனையம் மூலம் கூடுதலாக 20 லட்சத்து 40 ஆயிரம் கன்டெய்னர்களை கையாள முடியும். கன்டெய்னர் முனையம் அமைக்கும் பணி முழுமையாக முடிந்தால் ஆண்டுக்கு இங்கு 1 கோடி கன்டெய்னர்களை கையாளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பிரதமர் நரேந்திரமோடி ரூ.16 ஆயிரத்து 700 கோடி செலவில் உருவாக உள்ள நவிமும்பை சர்வதேச விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்துகொண்டார். சர்வதேச விமான நிலைய பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

உலகமயமாக்கல் சாதாரண ஒன்றாகிவிட்டதால் நாம் அதோடு பயணிக்க வேண்டும். உலக சந்தையுடன் இணைப்பில் இருக்க நமக்கு சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகள் தேவை. இந்திய வான்வெளி போக்குவரத்து துறை வியக்கத்தக்க வகையில் வளர்ந்து வருகிறது. விமானத்தில் செல்லும் மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

இதனால் வான்வெளி போக்குவரத்தின் தரத்தை மேலும் உயர்த்த வேண்டியது கட்டாயமாகி உள்ளது. இது விமான போக்குவரத்தின் மிகப்பெரிய திட்டம். நாட்டில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதை விரைந்து முடிக்க நாங்கள் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். விமானப்போக்குவரத்து அதிகரித்தால் நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும். இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். வான்வெளி போக்குவரத்து கொள்கையை உருவாக்க கடந்த கால அரசு தவறிவிட்டது. நாங்கள் அந்த கொள்கையை உருவாக்கினோம். சாதாரண செருப்பு அணியும் சாமானியன் கூட விமானத்தில் பயணம் செய்யும் நிலையை உருவாக்க விரும்புகிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் செய்திகள்