சாமிநாதன் விமர்சனம் குறித்து காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார்

பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் விமர்சனம் செய்தது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயவேணி போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.

Update: 2018-02-18 21:45 GMT
புதுச்சேரி,

புதுவை அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

குறிப்பாக நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயவேணி குறித்தும் அவர் விமர்சித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சாமிநாதனுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் எச்சரிக்கை விடுத்தார். அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் விஜயவேணி எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து சாமிநாதனின் விமர்சனம் குறித்து புகார் தெரிவித்தார்.

இதன்பின் நேற்று போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதமை விஜயவேணி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார். மனுவினை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். வன்கொடுமை தடுப்பு பிரிவிலும் சாமிநாதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்