ஆசிரியர்கள் 21-ந்தேதி முதல் நடைபெற உள்ள தொடர் மறியல் போராட்டத்தில் பங்கேற்க முடிவு

வருகிற 21-ந்தேதி முதல் நடைபெற உள்ள தொடர் மறியல் போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என ஆரம்ப பள்ளி, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-02-18 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் ராஜா ஜெகஜீவன் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

2016 ஜனவரி முதல் செப்டம்பர்-2017 வரையிலான 21 மாத கால 7-வது ஊதியக்குழுவின் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியில் தலைமை ஆசிரியர்களே ஆய்வக உபகரணங்களையும், நூலகத்திற்கான புத்தகங்களையும் வாங்கி கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும். பொறுப்பு மாவட்ட கல்வி அதிகாரி பணியிடத்திற்கு சம ஊதிய விகிதத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும், தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்கள் சமூக விரோதிகளாலும், மாணவர்களாலும் தாக்கப்படும் நிகழ்வுகள் நடந்து இருப்பதால் தலைமை ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் வழங்கிட உத்தரவாதம் அளிக்க வேண்டும். வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) முதல் ஜாக்டோ- ஜியோ சார்பில் நடைபெற உள்ள தொடர் மறியல் போராட்டங்களில் திரளாக பங்கேற்பது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில அமைப்பு செயலாளர் உதயகுமார், பொருளாளர் கணேசன், சட்ட செயலாளர் தமிழ்செல்வன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் சிறப்பு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டணியின் மாநில கூடுதல் தலைவர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ரா.தாஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசினார். அவர் பேசுகையில் ‘இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவை தொகையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-ந்தேதி முதல் நடைபெற உள்ள தொடர் மறியல் போராட்டத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் முழுமையான அளவில் பங்கேற்க வேண்டும்’ என்றார்.

கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்