மண்ணச்சநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்-வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு

மண்ணச்சநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்-வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு ஆர்.சி.புத்தகத்தையும் எடுத்து சென்ற மர்ம நபர்கள்

Update: 2018-02-18 22:00 GMT
சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா.அய்யம்பாளையம் மேலூரை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 31). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகில் உள்ள ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டு சென்று விட்டார். நேற்று பட்டப்பகலில் சாவியை எடுத்த மர்ம நபர்கள் வீட்டை திறந்து உள்ளே சென்று பீரோவை கம்பியால் நெம்பி திறந்து பார்த்துள்ளனர். பீரோவில் நகை, பணம் எதுவும் சிக்காததால் அதிலிருந்த இருசக்கர வாகன ஆர்.சி. புத்தகம் மற்றும் வீட்டில் இருந்த ஹோம் தியேட்டர், டி.டி.எச்.டிஷ் ஆகியவற்றை திருடிக்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டை பூட்டி சாவியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு சென்று விட்டனர். திருடிய மோட்டார் சைக்கிளை சமயபுரம் பகுதியில் உள்ள ஒருவரிடம் மர்ம நபர்கள் விற்க முயன்றதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளை வாங்க முயன்றவர் ஆர்.சி.புத்தகத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது ராஜரத்தினம் பேசியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஊர் திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் திருட்டு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசில் ராஜரத்தினம் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விசாரணை நடத்தினார். இந்த திருட்டு தொடர்பாக சமயபுரம் பகுதியில் நின்ற ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரணை செய்ததில், அவர் துறையூர் அருகே உள்ள கீழநடுவலூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (36) என்பதும், அவருடன் சேர்ந்து சிலர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து திருச்சி ஜே.எம். 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்