சின்னமனூர் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2018-02-18 21:30 GMT
சின்னமனூர்,

சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த 4 மாதத்துக்கு முன்பு நெல் நடவு செய்திருந்தனர். இதனையடுத்து நெல் விளைந்து கடந்த ஒரு வாரமாக அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் 61 கிலோ எடை கொண்ட நெல் மூட்டை ஆயிரத்து 100 ரூபாய் வரை விலை போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து அறுவடை தீவிரமடைந்ததால் வியாபாரிகளும் வேகமாக நெல்லை கொள்முதல் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு பெய்த மழையை கருத்தில் கொண்டு நெல் நனைந்து ஈரமாக இருப்பதாக கூறி தற்போது 61 கிலோ கொண்ட நெல் மூட்டைக்கு 200 ரூபாய் வரை விலையை குறைத்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதனை காரணம் காட்டி வியாபாரிகள் நெல் கொள்முதல் விலையை வெகுவாக குறைத்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு கவலை அடைந்து உள்ளனர், என்றார்.

மேலும் செய்திகள்