தொழிற்கூடங்கள் தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
தொழிற்கூடங்கள் தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழிற்கூடங்களை எளிதாக தொடங்குவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மாவட்ட தொழில் மையம் மூலம் சுயதொழில் தொடங்க 25 சதவீத மானியத்துடன் வங்கி கடன் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தில் குறு, சிறு தொழில்களை ஊக்குவிக்க தமிழக அரசு மூலம் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீட்டு மானியமாகவும், மின் மானியமாக 3 ஆண்டுகளுக்கு 20 சதவீத மானியம் மற்றும் பல்வேறு சலுகைகளை மாவட்ட தொழில் மையம் வழங்குகிறது.
மேலும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கொள்கைகள் எளிமையாக்கப்பட்டு தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் இடர்பாடுகளை களைய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக குழு அமைக்கப்பட்டு உரிமங்கள், மின் இணைப்புகள் ஒப்புதல் ஆகியவற்றை சிரமமின்றி வழங்க வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த குழு மூலம் தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு தேவையான உரிமங்கள், மின் இணைப்புகள், தடையின்மை சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம். தொழில் முனைவோர் www.investingintamiln-adu.com என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம். இந்த குழு 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு தொழில் தொடங்க கட்டிட வரைபட அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.