நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் மாதச்சம்பளம் ரூ.13,380 வழங்க கோரி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2018-02-17 22:15 GMT
பந்தலூர்,

பந்தலூர் நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் 50 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்காலிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் நகராட்சி பகுதியில் தினமும் சேரக்கூடிய குப்பைகளை அகற்றி வருகின்றனர். தொழிலாளி ஒருவருக்கு மாதச்சம்பளம் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாதச்சம்பளம் ரூ.13,380 வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லியாளம் நகராட்சி அலுவலக துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தின் அருகே அமர்ந்து துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.

இது குறித்து துப்புரவு தொழிலாளர்கள் கூறும்போது, தற்காலிக துப்புரவு தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளம் ரூ.13,380 வழங்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ரூ.9 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் முறையீட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் தீர்வு காணப்படும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்