சமத்தூரில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது: சிலிண்டர் வெடித்து சிதறியதில் பள்ளி மாணவன் படுகாயம்

சமத்தூரில் குடிசை வீடு தீப்பிடித்து, சிலிண்டர் வெடித்து சிதறியதில் பள்ளி மாணவன் படு காயமடைந்தான்.

Update: 2018-02-17 22:15 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே சமத்தூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). தையல் தொழிலாளி. இவரது வீடு புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக அருகில் உள்ள இடத்தில் ஒரு குடிசை அமைத்து, அங்கேயே சிலிண்டர் வைத்து சமையல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நாகராஜின் மனைவி கன்னீஸ்வரி டீ போட்டு குடித்து விட்டு, அருகில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இதற்கிடையில் குடிசையில் எதிர்பாராதவிதமாக திடீரென்று தீப்பிடித்தது. இதில் குடிசையில் இருந்த மோட்டார் சைக்கிள், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

மேலும் அங்கிருந்த சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்தது. சத்தம் கேட்டு கன்னீஸ்வரி வெளியே வந்து பார்த்த போது, குடிசை தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சிலிண்டர் வெடித்து சிதறியதில், அதில் உள்ள மூடி பறந்து சென்று, அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ராமலிங்கம் என்பவரது மகன் வீரமணிகண்டனின் (13) தலையின் பின்பகுதியில் விழுந்தது. இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த வீரமணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். படுகாயமடைந்த வீரமணிகண்டன் அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த தீ விபத்து குறித்து கோட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்