57 அடி உயர பாகுபலி சிலைக்கு மகா மஸ்தகாபிஷேகம் தொடங்கியது 2,858 அடி மலை மீது ஏறி சித்தராமையா வழிபாடு நடத்தினார்

சரவணபெலகோலா விந்தியகிரி மலையில் உள்ள 57 அடி உயரமுடைய பாகுபலி சிலைக்கு நேற்று மகா மஸ்தகாபிஷேகம் தொடங்கியது.

Update: 2018-02-17 22:30 GMT
சிக்கமகளூரு,

சரவணபெலகோலா விந்தியகிரி மலையில் உள்ள 57 அடி உயரமுடைய பாகுபலி சிலைக்கு நேற்று மகா மஸ்தகாபிஷேகம் தொடங்கியது. 2,858 அடி உயர மலை மீது ஏறி முதல்-மந்திரி சித்தராமையா மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கோமதேஸ்வரர் கோவில்

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் உள்ளது கோமதேஸ்வரர் கோவில். இந்த கோவில் விந்தியகிரி என்ற மலை மீது அமைந்துள்ளது. அதன் அருகே சந்திரகிரி என்ற மலையும் உள்ளது. இந்த 2 மலைகளிலும் பழமையான ஜெயின் மத மடங்கள் அமைந்து உள்ளன.

விந்தியகிரி மலை மீது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 57 அடி உயர பாகுபலி (கோமதேஸ்வரர்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 7 உலக அதிசயங்களில் ஒன்றாக கோமதேஸ்வரர் கோவிலும் இடம்பெற்று உள்ளது. இப்படி பல்வேறு சிறப்பு மிக்க இந்த கோவிலில் அமைந்து உள்ள பாகுபலி சிலை கி.பி.981-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த காலத்தில் கங்கா வம்சத்தை ஆண்ட மன்னர் கங்கரசா மாச்சா மல்லா மகா மந்திரி ஆட்சியில் சேனாதிபதியாக இருந்த சாவுண்டராயா என்பவரால் பாகுபலி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

88-வது முறையாக....


இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா மஸ்தகாபிஷேக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழா மைசூரு மன்னர் காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விழா 20 நாட்களுக்கு ஜெயின் மதத்தினரால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதுவரை 87 முறை மகா மஸ்தகாபிஷேக விழா நடந்து உள்ளது.

இறுதியாக கடந்த 2006-ம் ஆண்டு மகா மஸ்தகாபிஷேக விழா நடந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு(2018) 88-வது மகா மஸ்தகாபிஷேக விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

மகா மஸ்தகாபிஷேகம்

மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்துகொள்ள ஏராளமான ஜெயின் மத துறவிகள் சரவணபெலகோலாவுக்கு வருகை தந்து உள்ளார்கள். மேலும் அங்கு தினமும் பாகுபலிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டு வந்தன. அத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கோமதேஸ்வரருக்கு மகா மஸ்தகாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று மடாதிபதி சாருகீர்த்தி பட்டரக்க சுவாமி கூறி இருந்தார். மேலும் மகா மஸ்தகாபிஷேகத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைப்பார் என்றும் கூறப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மதியம் 2 மணியளவில் மகா மஸ்தகாபிஷேக விழா தொடங்கியது.

ராஜஸ்தான் தொழில் அதிபர்

மகா மஸ்தகாபிஷேகத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் அவர் வருவதற்கு தாமதம் ஆனதால், கோமதேஸ்வரருக்கு மகா மஸ்தகாபிஷேகத்தில் முதலில் ஜல அபிஷேகம் நடந்தது. அதாவது ராஜஸ்தானை சேர்ந்த தொழில் அதிபரான அசோக் என்பவர் தனது உறவினர்களான கவுரிலால், பிரீத்தம் ஆகியோருடன் சேர்ந்து கோமதேஸ்வரருக்கு ஜல அபிஷேகம் செய்து மகா மஸ்தகாபிஷேகத்தை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பாகுபலி வாழ்க, பாகுபலி வாழ்க என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த கோஷம் விண்ணை பிளக்கும் அளவிற்கு இருந்தது. கோமதேஸ்வரருக்கு முதல் ஜல அபிஷேகம் செய்ய அசோக், கோமதேஸ்வரர் கோவிலில் நடந்த ஏலத்தின் போது ரூ.1 கோடியே 8 லட்சம் செலுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து 2-வது ஜல அபிஷேகம் செய்ய குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபரான பங்கஜ் ஜெயின் என்பவர் ரூ.69 லட்சத்தை ஏலத்தொகையாக செலுத்தி இருந்தார். அவரும் கோமதேஸ்வரருக்கு ஜல அபிஷேகம் செய்து வழிபட்டார்.

சித்தராமையா வழிபாடு

இதனை தொடர்ந்து மதியம் 3.30 மணியளவில் முதல்-மந்திரி சித்தராமையா விந்தியகிரி மலை அடிவாரத்துக்கு கார் மூலம் வந்தார். பின்னர் அவர் படிக்கட்டுகள் வழியாக 2,858 அடி உயர மலைமீது ஏறி கோமதேஸ்வரரை தரிசிக்க வந்தார். அவருடன் மந்திரிகள் மஞ்சு, மகாதேவப்பா, உமாஸ்ரீ, கோமதேஸ்வரர் கோவிலின் மடாதிபதி சாருகீர்த்தி பட்டரக்க சுவாமி, தர்மசாலா கோவில் நிர்வாகி அதிகாரி வீரேந்திர ஹெக்டே, ஹாசன் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி ஆகியோரும் வந்தனர்.

பின்னர் மலைக்கு சென்றதும் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகள் மஞ்சு, உமாஸ்ரீ, ஆகியோர் புனிதநீரை பாகுபலி சிலை மீது அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து சித்தராமையா கோமதேஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். மாலை 5.30 மணி அளவில் பாகுபலிக்கு 108 பால் அபிஷேகம் நடந்தது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் மகா மஸ்தகாபிஷேகத்தில் கோமதேஸ்வரருக்கு இளநீர், சந்தனம், குங்குமம், பால், பாயாசம், கேசரி, கரும்புசாறு உள்ளிட்ட திவ்ய, திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

இதையொட்டி விந்தியகிரி மலை மற்றும் அடிவாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக பெங்களூரு, மைசூரு, மண்டியா உள்பட மாநிலம் முழுவதும் இருந்து சரவணபெலகோலாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 26-ந்தேதி வரை இயக்கப்படும் என்றும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்