அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு நீதிமன்ற உத்தரவின்பேரில் போலீஸ் நடவடிக்கை

வாணியம்பாடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் மீது நீதிமன்ற உத்தரவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-02-17 22:15 GMT
ஆம்பூர்,

வாணியம்பாடியை அடுத்த இந்திரா நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

புதூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை பிரேமாகுமாரி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என்பதால் கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியை சேர்ந்த கங்காதரன், சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் சிலர் தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தியிடம் இதுபற்றி கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கங்காதரன் மகன் ஜெயபாலை, தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயபாலும், சத்தியமூர்த்தியும் தனித்தனியாக வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கங்காதரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்து, 6 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ஜெயபால் கொடுத்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இதுகுறித்து நீதிமன்றத்தில் ஜெயபால் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்ய வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்