சிறு, குறு தொழில்கள் எளிய நடைமுறையில் மேம்படுத்தப்படும் அமைச்சர் பெஞ்சமின் தகவல்

நாகை நகரத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக சிறு,குறு தொழில்கள் எளிய நடைமுறையில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.

Update: 2018-02-17 22:45 GMT
நாகப்பட்டினம்,

இந்திய வர்த்தக தொழிற்குழுமம் மற்றும் அனைத்து சேவை சங்கங்கள் சார்பில் நாகை நகரம் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு இந்திய வர்த்தக தொழிற்குழும தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்திய வர்த்தக தொழிற்குழும முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவானந்தம், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் செயலாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுபாஷ்சந்திரன் வரவேற்றார். இதில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு நாகை நகர மேம்பாடு குறித்து பேசினர். அப்போது அமைச்சர் பெஞ்சமின் பேசியதாவது:-

நாகை மாவட்டம் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலில் முன்னோடி மாவட்டமாக விளங்குகிறது. மேலும் இந்த மாவட்டம் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதமும் சங்கமிக்கும் மதநல்லிணக்க மாவட்டமாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் உடைய நாகையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், என்னிடமும், முதல்-அமைச்சரிடமும் தெரிவித்துள்ளார்.

நாகை நகரத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக சிறு,குறு தொழில்கள் எளிய நடைமுறையில் மேம்படுத்தப்படும். நாகை மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டு களாக தொழில் முனைவோர் தொழில் தொடங்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நிதிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 34 சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்க வலியுறுத்தப்பட்டு, 17 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கநாதன், அமைச்சர்களிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும், சிறு,குறு தொழில்களை மேம்படுத்த நாகையில் உரிய வளர்ச்சி திட்டங்கள் தேவை எனவும் கூறப்பட்டிருந்தது. இதில் இந்திய வர்த்தக தொழிற்குழும துணை தலைவர் மதியழகன், பொருளாளர் தர்மலிங்கம், இணை செயலாளர் கணேசன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்