நேரடி உர மானியத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும், கலெக்டர் பேச்சு

நேரடி உர மானியத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தார்.

Update: 2018-02-17 22:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து அவர் கூறியதாவது:-

2017-ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை 23 சதவீதம் மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 13 சதவீதம் அதிக அளவில் பெய்துள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் 30-11-2017-க்கு முன் காப்பீடு செய்த விவசாயிகளில் விடுபட்ட 8 ஆயிரம் விவசாயிகளில் மப்பேடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு ஒரு வார காலத்திற்குள் ரூ.48 லட்சம் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு நேரடி உர மானிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கால்நடைத்துறையின் மூலம் வழங்கப்படும் மானியம் ரூ.20 ஆயிரத்தை பெற்று கால்நடைத்தீவனம் தயாரித்து பால் உற்பத்தியை பெருக்கி பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த திரளான விவசாயிகள், பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து காப்பீட்டு தொகை பெறாத விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பு தொகை வழங்க வேண்டும்.

புதியதாக பயிர்க்கடன் கோரும் விவசாயிகளிடம் பிற வங்கிகளிடம் இருந்து கடனில்லா சான்று கேட்பதை தவிர்க்க வேண்டும், நீர் ஆதாரங்களான ஏரி, குளம் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தடுப்பணைகள் கட்ட வேண்டும். வரத்து கால்வாய், ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை விடுத்தனர்.

மேலும் செய்திகள்