ஜல்லிக்கட்டில் வீரர்களை பந்தாடிய காளைகள் 27 பேர் காயம்

கறம்பக்குடி அருகே மழையூரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-02-17 23:00 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடத்த கிராமமக்கள் முடிவு செய்தனர்.

இதற்காக வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர்களுக்கான இடம், காளைகள் வெளியேறும் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கும் பணி போன்றவை வருவாய்த்துறையினரின் கண்காணிப்பில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்முத்தலிபு தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகைசாமி, பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, கரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 642 காளைகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர்.அவைகளுக்கு முதலில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதேபோல மாடுபிடி வீரர்களுக்கும் உடல் தகுதி பரிசோதனை நடத்தி அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

கறம்பக்குடி வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேஷ்வரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 231 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கினர். இதையடுத்து ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலில் கோவில் காளைக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டு, வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. இதையாரும் பிடிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர். இதில் பல மாடுகள் வீரர்களை அச்சுறுத்தும் விதத்தில் தூக்கி வீசி பந்தாடின. சில காளைகள் களத்தில் சுழன்று வீரர்களை நெருங்கவிடவில்லை.

இதில் காளைகள் முட்டியதில் குமரேசன் (வயது 28), செந்தில் (35), கருப்பையா உள்பட 27 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், சேர், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து, மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

ஜல்லிக்கட்டை பார்க்க ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சில இளைஞர்கள் அருகில் இருந்த மரங்களில் ஏறி உட்கார்ந்து கண்டுகளித்தனர். 

மேலும் செய்திகள்