நீரில் மிதக்கும் கோட்டையில் வாழும் முதிய தம்பதி!

கனடாவில் தண்ணீரில் மிதக்கும் தனிமையான கோட்டையில் வயதான தம்பதி ஒன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறது. அறுபது வயதைக் கடந்த அந்தத் தம்பதியின் கோட்டைக்கு அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை. ஆனாலும் அவர்களின் சந்தோஷத்துக்குக் குறைவில்லை.

Update: 2018-02-17 07:32 GMT
கனடாவின் வான்கூவர் கடற்கரைப் பகுதியில் ஒரு தீவு அமைந்திருக்கிறது. அங்கு நகர வாழ்க்கையைத் துறந்துவிட்டு, கடற்கரை முகத்துவாரப் பகுதியில் தண்ணீரில் கோட்டையை அமைத்து வாழ்ந்துவருகிறார்கள், அந்தத் தம்பதியினர்.

கோட்டை மாதிரியில் அமைந்திருக்கும் அந்த வீட்டில், பசுமை வீடு, நடன அரங்கம், கலைக்கூடம், விருந்தினர்களுக்கான கலங்கரை விளக்கக் கோபுரம், ஸ்டூடியோ, சோலார் மற்றும் ஜெனரேட்டர் மின்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 12 அறைகள் என்று அட்டகாசமான வசதிகள் இருக்கின்றன.

அதை வடிவமைத்து வாழும் தம்பதியின் பெயர் வெய்ன் ஆடம்ஸ் (66) மற்றும் கேத்ரின் கிங் (59). இந்தக் கோட்டை கடற்கரை முகத்துவாரப் பகுதியில் நீரில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் மற்றொரு சிறப்பு.

எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அதற்கு ஏற்றாற்போல் கோட்டை தன்னை உயர்த்தியும், தாழ்த்தியும் தானாக அமைத்துக்கொள்ளும். இந்த மிதக்கும் கோட்டையை கடந்த 1992-ம் ஆண்டு வெய்ன் ஆடம்ஸ் அமைத்தார்.

இந்தக் கோட்டையை முதன்முதலில் சாதாரணமாகத்தான் கட்டினார்கள். பின்னர் அங்கேயே வாழ்க்கையை வாழ விரும்பிய தம்பதிகள் இருவரும் கோட்டையாக மாற்றிக் கொண்டனர். தங்களுடைய கோட்டையை ரசிக்கவரும் விருந்தினர்களை உபசரிக்க விருந்தினர்களுக்கான கூடமும் அமைத்தனர்.

வெய்ன் ஆடம்ஸ் காவலர் மற்றும் ஓவியராக இருந்தவர். கேத்ரின் கிங் ஓவியர், நடனக் கலைஞர், எழுத்தாளர் மற்றும் இசைக்கலைஞர்.

இந்த வயதான தம்பதியின் இறுதிக்காலம் ஓவியம் வரைதல், எழுதுதல், விளையாடுதல் எனக் கழிகிறது.

இவர்கள் உணவுக்காக அரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுக் கொள் கிறார்கள். உணவுக்குத் தேவைப்படும் மீன்களை வெய்ன் ஆடம்ஸ் தனது மனைவி கேத்ரின் கிங்குடன் அவ்வப்போது படகில் சென்று பிடித்துக்கொள்கிறார்.

மழை எப்போது பெய்தாலும் அதை குடிநீருக்காக சேமித்துக் கொள் கிறார்கள். அவர்கள் தீவில் உள்ள தண்ணீரில் வாழ்ந்து வந்தாலும், கோடைக்காலத்தில் அருகில் இருந்து வரும் தண்ணீரால் கோட்டையும், அதனால் தம்பதியும் எப்போதும் மிதந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இக்கோட்டையைச் சுற்றிலும் 14 சூரிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், இரவில் எப்போதும் கோட்டை ஒளியில் மிளிர்ந்து கொண்டே இருக்கும். கோடைக்காலத்தில் இந்தத் தம்பதிகளைப் பார்க்க அதிகமான நண்பர்கள் வருகைதருகின்றனர். அவர்களைத் தவிர, இப்படி ஒரு தம்பதியினர் வாழ்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு இவர்களைப் பார்க்கவரும் ஆட்களும் உண்டு.

இந்தக் கோட்டையில் முதிய தம்பதிகளுக்குத் துணை, அவர்கள் வளர்க்கும் நாய்கள் மட்டும்தான். இக்கோட்டையில் வெய்ன் ஆடம்ஸ் எந்தத் தொலைத்தொடர்பு சாதனத்தையும் வைத்துக் கொண்டதில்லை, இனியும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்த மிதக்கும் கோட்டைக்குச் சென்று திரும்பியவர்கள் அனைவரும், கோட்டையைப் பற்றியும், அங்குள்ள வயதான தம்பதியைப் பற்றியும் ஆச்சரியம் மாறாமல் பேசிக்கொள்கிறார்கள்.

மரணம் வரைக்கும் அங்கேயே இருக்க வேண்டும் என்பதுதான் அத்தம்பதியின் ஆசையாம்.

தனியே என்றாலும், தமக்குப் பிடித்த விதத்தில் வாழ்வதால் அவர்களிடம் எப்போதும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. தங்களின் தனித்தன்மையான கோட்டையில் சந்தோஷம் மாறாமலே வளையவருகிறார்கள்.

மேலும் செய்திகள்