திட்டச்சேரி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

திட்டச்சேரி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையா? என்று உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.

Update: 2018-02-16 23:14 GMT
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கட்டுமாவடி ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகள் ஆனந்தி (வயது22). கடந்த 2015-ம் ஆண்டு ஆனந்திக்கும், காரைக்கால் மாவட்டம் காசாகுடி வடபாதி பகுதியை சேர்ந்த பாலையன் மகன் ராஜசேகருக்கும் (28) திருமணம் நடந்தது. இவர் களுக்கு 1½ வயதில் ராஜஸ்ரீ என்ற பெண் குழந்தையும், ஆகாஷ்(6மாதம்) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் அந்தபகுதியில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஆனந்தியின் தாயார் ரதிஅம்மாள் (50) தனது சொந்த ஊரான கட்டுமாவடியில் கணவன்-மனைவி 2 பேரையும் அழைத்து வந்து அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வைத்தார். இந்தநிலையில் நேற்று இரவு ராஜசேகர் குடிபோதையில் ஆனந்தியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஆனந்தியின் குடும்பத்தினரிடமும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ஆனந்தி வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்த ஆனந்தியின் தாயார் ரதிஅம்மாள் கதறி அழுதார்.

இதுகுறித்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆனந்தியின் கணவர் ராஜசேகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 3 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்