பிரதமரின் வருகையொட்டி புதுவை-தமிழக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை

புதுவை-தமிழக போலீசார் பிரதமர் நரேந்திர மோடி வருகையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

Update: 2018-02-16 22:30 GMT
புதுச்சேரி,

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் சர்வதேச நகரம் உள்ளது. இதன் உதய தினவிழா மற்றும் 50-வது பொன்விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுவைக்கு வருகிறார். பிரதமரின் வருகையொட்டி ஆரோவில் மற்றும் புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் புதுவை காவல்துறை தலைமையகத்தில் போலீஸ் டி.ஜி.பி.சுனில்குமார் கவுதம் தலைமையில் தமிழக போலீசாருடன் பிரதமர் நரேந்திர மோடி வருகையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் புதுவை போலீஸ் டி.ஐ.ஜி.ராஜீவ் ரஞ்சன் உள்பட விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் புதுவை-தமிழக போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, மின்துறை, போக்குவரத்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பிரதமர் வருகையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

மேலும் செய்திகள்