காவிரி நீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து கர்நாடக சங்க அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 20 பேர் கைது

காவிரி நதிநீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து கர்நாடக சங்க அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-16 23:00 GMT
கோவை,

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு 14.75 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் தமிழக டெல்டா மாவட்டங்களில் பெரிதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து, கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள கர்நாடக சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று மதியம் 3 மணிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் ஏராளமானோர் அந்த அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கைகளில் கொடிகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியபடியும் வந்தனர்.

உடனே அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் அந்த அலுவலகம் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு முன்பே, இரும்பினால் ஆன தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

சிலர் போலீசார் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை தாண்டி கர்நாடக சங்கஅலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அதில் சிலரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கு.ராமகிருட்டிணன், மாவட்ட தலைவர் வேலுசாமி, செயலாளர் அகில் குமாரவேல், மாநகர தலைவர் கோபால், பொருளாளர் ரஞ்சித்பிரபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர துணை செயலாளர் குரு உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தமிழகத்துக்கு அநீதியானது. ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீர் போதாது என்று கூறிதான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அதிலும் 14.75 டி.எம்.சி.யை குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.

இதே தீர்ப்பு தமிழகத்துக்கு ஆதரவாக வழங்கி இருந்தால், கர்நாடகாவில் பெரிய போராட்டங்களே நடந்து இருக்கும். தமிழக மக்கள் பொறுமைசாலிகள், எதையும் தாங்கிக்கொள்வார்கள் என்று நினைத்துதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே இதை கண்டித்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்