சாலையில் கொட்டி கிடந்த மணலால் வழுக்கி விழுந்து வாகன ஓட்டிகள் காயம்

திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் அருகே சாலையில் கொட்டி கிடந்த மணலால் வழுக்கி விழுந்து வாகன ஓட்டிகள் காயம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-02-16 23:00 GMT
திருச்சி,

திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானா-மதுரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் பாலத்தின் கீழ் உள்ள அணுகுசாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வரு கின் றன. மிகவும் குறுகலான இந்த சாலை குண்டும், குழியுமாகவும், மேடு, பள்ளமாகவும் இருப்பதால் அந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் மெதுவாக சென்று வருகின்றன. இதன் காரணமாக அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை ஜங்ஷன் மேம்பாலத்தின் கீழ் உள்ள அணுகு சாலையில் கருப்பு நிறத்திலான மணல் சிறிது தூரத்துக்கு கொட்டப்பட்டு கிடந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மணலில் சிக்கி வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்தனர். மேலும் அந்த சாலையில் சென்றவர்களின் உடைகள் முழுவதும் கருப்பு நிறமாக மாறியது.

மணலில் இருந்து புழுதி பறந்ததால் நேற்று காலை ஏராளமான வாகனங்கள் அந்த பகுதியை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டன. இதனால் அங்கு வழக்கத்தைவிட கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. உடனே போக்குவரத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த சிலர் குழாய் மூலம் தண்ணீரை சாலையில் தெளித்து புழுதியை கட்டுப்படுத்தினர். அதன்பிறகே அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்