கங்கைகொண்டான், கயத்தாறு பகுதியில் விளைந்த மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

கங்கைகொண்டான், கயத்தாறு பகுதியில் விளைந்த மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைக்காததால், அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2018-02-16 20:45 GMT
நெல்லை,

கங்கைகொண்டான், கயத்தாறு பகுதியில் விளைந்த மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைக்காததால், அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மக்காச்சோளத்துக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மக்காச்சோளம் விளைச்சல்


நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான், மானூர் பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கடம்பூர் பகுதியிலும் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் மானாவாரி விவசாயம் சரிவர நடைபெறவில்லை. கடந்த ஆண்டு ஓரளவு பருவமழை பெய்ததால் நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன.

இந்த பயிர் விளைச்சல் அடைகின்ற நேரமான மார்கழி மாதத்தின் இறுதியிலும், தை மாதத்தின் முதலிலும் மழை பெய்து இருந்தால் அமோக விளைச்சல் கிடைத்து இருக்கும். அந்த நேரத்தில் மழை பெய்யாதால் விளைச்சல் குறைந்து உள்ளது. அதாவது கிணறு வைத்து உள்ள விவசாயிகள் கிணற்று தண்ணீரை பாய்ச்சி பயிர்களை காப்பாற்றினர்.

ஈரப்பதம்


இதனால், கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மக்காச்சோளம் விளைச்சல் ஆகியுள்ளது. விளைந்த மக்காச்சோளத்தை, விவசாயிகள் அறுவடை செய்து நான்குவழிச்சாலையில் உள்ள இணைப்பு சாலைகளிலும், கடம்பூர் அருகே உள்ள பன்னீர்குளம் பகுதியில் உள்ள பழைய காலத்து விமானநிலையத்தின் ஓடுபாதையிலும் காயப்போட்டு உள்ளனர். மேலும், அவர்கள் காய்ந்த மக்காச்சோளத்தை அங்கே வைத்து சுத்தம் செய்து மூடைகளில் எடை போட்டு வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள். வியாபாரிகள் காயப் போட்டுள்ள இடத்திற்கே வந்து மக்காச்சோளம் எவ்வளவு டிகிரி ஈரப்பதம் உள்ளது என்பதை கருவி மூலம் கண்டறிந்து, அதற்கான விலையை நிர்ணயம் செய்து அங்கேயே எடைபோட்டு அதை வாங்கி செல்கின்றனர்.

ஒரு குவிண்டால் மக்காச்சோளம் (100 கிலோ) விலை ரூ.1,200 முதல் 1,250 வரை விவசாயிகளிடம் வாங்கப்படுகிறது. ஆனால் இந்த விலை போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

கயத்தாறு அருகே உள்ள டி.என்.குளத்தை சேர்ந்த விவசாயி முத்துமாலை கூறுகையில், ‘தற்போது, ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. ரூ.1,200-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் 4 நாட்கள் காயப்போட்ட பிறகு இந்த விலைக்கு விற்பனையாகிறது. இது எங்களுக்கு நஷ்டம், வேலை ஆட்கள் சம்பளம், மருத்து அடித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட வேலைகளுக்கு செலவிட்டதை கணக்கிட்டால், தற்போது விற்பனையாகும் தொகை எங்களுக்கு கட்டுபடியாகவில்லை. மக்காச்சோளத்தை குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் விலைக்கு விற்பனை செய்தால் தான் எங்களுக்கு உரிய விலை கிடைக்கும். மற்ற மாநிலங்களில் மானாவாரி பயிர்கள், சிறுதானியங்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்கிறது. மேலும் மானியம் வழங்குகிறது அது போல் தமிழகத்திலும் அரசே விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்றார். இதே கருத்தை அனைத்து விவசாயிகளும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்