ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலி

திருக்கோவிலூர் அருகே ஏரியில் மூழ்கி அக்காள், தங்கை பலியாகினர்.

Update: 2018-02-16 01:35 GMT
திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள எரவலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு ரஞ்சிதா (30) என்கிற மனைவியும், பூவரசி (6), பவ்யா (4), மீரா (2) ஆகிய 3 பெண் குழந்தைகளும், ஒரு வயதில் தருண்குமார் என்கிற மகனும் உள்ளனர். பூவரசி பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று காலை வெங்கடேசனும், அவரது மனைவி ரஞ்சிதாவும் தருண்குமாரை தூக்கி கொண்டு அருகில் உள்ள வயலுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் பவ்யா, மீரா ஆகிய 2 பேர் மட்டும் இருந்தனர்.

இந்தநிலையில் பவ்யா, மீரா ஆகிய இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் இருவரும் கை, கால்களை கழுவுவதற்காக ஏரிக்குள் இறங்கினார்கள். அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினர். மீராவின் ஒரு கால் மட்டும் வெளியே தெரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற சிலர், மீராவை மீட்டு கிராம மக்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அக்காள், தங்கை இருவரும் ஏரிக்கு சென்றதை பார்த்த கிராம மக்களுக்கு பவ்யாவும் ஏரியில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு ஏரிக்கு வந்து, பவ்யாவை ஏரிக்குள் இறங்கி தேடினார்கள்.

அப்போது ஏரிக்குள் மூழ்கியிருந்த பவ்யாவை மயங்கிய நிலையில் கிராம மக்கள் மீட்டனர்.

பின்னர் இருவரையும் திருக்கோவிலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிள்களில் கொண்டுசென்றனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தபோது, பவ்யா, மீரா ஆகியோர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது.

இதனிடையே தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த வெங்கடேசன், ரஞ்சிதா மற்றும் உறவினர்கள் ஏரியில் மூழ்கி பலியான பவ்யா, மீரா ஆகியோரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்காள்-தங்கை ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் எரவலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்