ரங்கசாமி அரசும், மத்திய அரசுமே காரணம் அமைச்சர் கந்தசாமி குற்றச்சாட்டு

நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு அரசு தவிப்பதற்கு ரங்கசாமி அரசும், மத்திய அரசும் தான் காரணம் என்று அமைச்சர் கந்தசாமி குற்றம்சாட்டினார்.

Update: 2018-02-15 23:45 GMT
காரைக்கால்,

புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தனது துறை சார்ந்த அதிகாரிகளுடன் காரைக்காலில் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில், வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், கூடுதல் கலெக்டர் மங்களாட் தினேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், சமூக நலம், ஆதிதிராவிடர் நலம், கூட்டுறவு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகள் சார்பில் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கந்தசாமி கூறியதாவது,
பாப்ஸ்கோ உள்ளிட்ட பல்வேறு அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை இருக்கிறது. இதை வழங்கக்கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசிடம் நிதி இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். ரங்கசாமி அரசு, 500 பேர் வேலை செய்யும் இடத்தில் 1,500 பேரை நியமித்து சென்றுவிட்டது. அதுபோன்ற தவறான செயல்களால், ஊதியம் தர முடியாமல் உள்ளோம்.

எங்கள் அரசு நிதி தட்டுப்பாட்டில் தவிப்பதற்கு ரங்கசாமி அரசின் செயல்பாடுகளும், தற்போதைய மத்திய அரசின் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுமே காரணம். எனவே, மக்கள் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் விரைவில் பணிக்கு திரும்பவேண்டும். சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் மற்றும் புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு இன்னும் சில நாட்களில் 3 சக்கர வாகனம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்