எம்.சத்திரப்பட்டியில் 18-ந்தேதி ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவில் தள்ளுமுள்ளு போலீஸ் தடியடி

எம்.சத்திரப்பட்டியில் நடைபெற்ற காளைகள் முன்பதிவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.

Update: 2018-02-15 21:30 GMT
மதுரை

மதுரையில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ளது எம்.சத்திரப்பட்டி. இங்குள்ள குருநாத கோவிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுத்தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி வாடிவாசல், பார்வையாளர் மேடை, சிறப்பு விருந்தினர் மேடை, மைதானம் சீரமைப்பு, தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள், தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்போவதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் காளைகளுக்கான முன்பதிவு நடைபெற்றது. இதற்காக காளை உரிமையாளர்கள் அதிகாலையில் இருந்தே காளைகளுடன் அங்கு திரண்டி ருந்தனர். ஏராளமான பெண்களும் தங்கள் வளர்க்கும் காளைகளுடன் வந்து பதிவு செய்தனர்.

அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் காளைகளை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வரிசையில் காத்திருந்த காளை உரிமையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் மீண்டும் காளைகள் பதிவு நடைபெற்றது. நேற்று நடந்த முன்பதிவில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 800 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்