தோட்டக்கலை துறை மூலம் நுண்ணீர் பாசனத்துக்கு ரூ.9½ கோடி மானியம் இலக்கு கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் நுண்ணீர் பாசனத்துக்கு ரூ.9 கோடியே 69 லட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-02-15 22:30 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் நுண்ணீர் பாசனத்துக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கொட்டுநீர்பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மூலம் தோட்டக்கலை பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் நறுமண பயிர்கள் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு அதிக அளவு பரப்பில் சாகுபடி செய்து நீரை சிக்கனப்படுத்துவதுடன் விளைச்சலை அதிகரிக்கவும், விளைபொருட்களின் தரத்தை மேம்படுத்தவும் நுண்ணீர் பாசனம் அவசியமாகிறது.

இதன்மூலம் செடிகளின் வளர்ச்சி சீராக இருப்பதுடன் மகசூல் அறுவடை ஒரே நேரத்தில் வரும் என்பதால் விவசாயத்தில் இதன் தேவை அவசியமாகிறது. நுண்ணீர் பாசனத்தின் மூலம் உரத்துக்கான செலவு குறைவதுடன் களைகளை கட்டுப்படுத்தவும், வேலையாட்கள் செலவினத்தை குறைக்கவும் முடிவதால் கூடுதல் பயன் கிடைத்து வருகிறது.

ரூ.9 கோடியே 69 லட்சம்

இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டேருக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் நுண்ணீர் பாசனத்துக்கு மானியம் ரூ.9 கோடியே 69 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், வயல் வரைபடம், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிறு, குறு விவசாயி சான்று, மண், நீர் மாதிரி ஆய்வு அறிக்கை போன்றவற்றுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவோ இணையத்தளம் வழி சேவை வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி தோட்டக்கலை துறை மூலம் விவாயிகள் கூடுதல் பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்