அடுத்த 3 ஆண்டுகளில் மருந்து உற்பத்தியில், இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் அனந்தகுமார் பேச்சு

அடுத்த 3 ஆண்டுகளில் மருந்து உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் கூறினார்.

Update: 2018-02-15 21:45 GMT
பெங்களூரு,

அடுத்த 3 ஆண்டுகளில் மருந்து உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் கூறினார்.

மருத்துவ வசதிகள்

இந்திய மருந்து, உரம் மற்றும் ரசாயனத்துறை சார்பில் மருத்துவ சாதனங்கள் குறித்த கண்காட்சி தொடக்க விழா பெங்களூரு சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மருந்து, உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி அனந்தகுமார் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மத்திய பட்ஜெட்டில் ‘நமோ கேர்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 50 கோடி பேருக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கும். ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது மோடியின் கனவு. இந்த திட்டத்திற்கு தேவையான நிதி அரசிடம் உள்ளது. மருந்து உற்பத்தி சரியாக நடைபெற்றால் இது வெற்றி பெறும். அதனால் மருந்து உற்பத்தியாளர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

சமையல் கியாஸ் இணைப்பு

மருந்து உற்பத்தியில் இந்தியா தற்போது 3-வது இடத்தில் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் நமது நாடு முதல் இடத்தை பிடிக்கும். மின்சார வசதி இல்லாத 18 ஆயிரம் கிராமங்கள் மற்றும் 16 ஆயிரத்து 500 குக்கிராமங்களுக்கு மின் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். ஏழை மக்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

5 கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்கி இருக்கிறோம். இதெல்லாம் வளர்ச்சி இல்லையா?. 2008-ம் ஆண்டில் மலிவு விலை மருந்து கடைகளின் எண்ணிக்கை 99 ஆக இருந்தது. அதன் எண்ணிக்கையை நாங்கள் 3,150 ஆக உயர்த்தி இருக்கிறோம்.

இவ்வாறு அனந்தகுமார் பேசினார்.

மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும்

மத்திய இணை மந்திரி மன்சூப் மான்டவியா பேசுகையில், “2020-ம் ஆண்டுக்குள் இந்திய மருந்து துறை உலகின் மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும். மலிவு விலை மருந்து கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். மலிவு விலை மருந்து கடைகளால் மக்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர்“ என்றார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட சர்வதேச மருந்து நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. 300-க்கும் அதிகமான மருந்து நிறுவனங்கள் தங்களின் அரங்குகளை அமைத்துள்ளன.

மேலும் செய்திகள்