நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பரபரப்பு விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி

விபத்தில் வழக்கில் இழப்பீடு வழங்காததால் நேற்று நெல்லை புதிய பஸ்நிலையத்தில் 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

Update: 2018-02-15 21:30 GMT
நெல்லை,

விபத்தில் வழக்கில் இழப்பீடு வழங்காததால் நேற்று நெல்லை புதிய பஸ்நிலையத்தில் 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து வழக்கு


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விமல்ஜெனு (வயது 26). இவர், 25–9–2016 அன்று நாகர்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இழப்பீடு

இந்த நிலையில், தனக்கு இழப்பீடு கோரி விமல்ஜெனு நெல்லை 2–வது கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், அவருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு 21–4–2017 அன்று உத்தரவிட்டார்.

ஆனால் இழப்பீட்டு தொகையை போக்குவரத்து கழகம் வழங்காததால், விமல்ஜெனு நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி அப்துல்காதர், 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு


இதே போன்று, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்தவர் சந்திரா (வயது 56). இவர், 23–3–2016 அன்று அரசு பஸ் மோதி காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் தனக்கு இழப்பீடு கோரி, நெல்லை 2–வது கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், அவருக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு 20–4–2017 அன்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால் ஒரு அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ராஜாமுகமது ஆஜராகி வாதாடினார்.

3 பஸ்கள் ஜப்தி

நீதிபதி உத்தரவுப்படி கோர்ட்டு ஊழியர்கள் நேற்று நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், நாகர்கோவிலுக்கு புறப்பட தயாராக இருந்த 3 அரசு பஸ்களை ஜப்தி செய்தனர். இதனால் அந்த பஸ்களுக்காக காத்து இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்த சம்பவம் பஸ் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு மணி நேரத்து பிறகு நாகர்கோவிலுக்கு மற்றொரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி பயணிகள் நாகர்கோவில் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் புதிய பஸ்நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்