சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல்

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் செய்தனர்.

Update: 2018-02-15 22:00 GMT
நாமக்கல்,

சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.

நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த சாலைமறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் மனோகரன், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் நடேசன், பொருளாளர் சிவகாமி, ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரபிரசாத் உள்பட பலர் பேசினர்.

தொடர்ந்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வரையறுக்கப்பட்ட குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் சத்துணவு ஊழியர்களை கைது செய்தனர். இதில் 37 பெண்கள் உள்பட மொத்தம் 59 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீசார் வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்