தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-02-15 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தில் 23-க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதன் தரைதளத்தில் கூட்ட அரங்கம், கருவூல அலுவலகம் உள்ளிட்ட அலுவலகமும், முதல் தளத்தில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களும் உள்ளன.

3-வது தளத்தில் தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே கூட்ட அறையும் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஒவ்வொரு மாதமும் உதவி இயக்குனர் ஆய்வு கூட்டம் நடத்துவது வழக்கம்.

அப்போது பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், தணிக்கை குறித்து தணிக்கை துறை அதிகாரியும் ஆய்வு நடத்துவது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இளங்கோ, உள்ளூர் தணிக்கை துறை அதிகாரி அப்துல்சலாம் ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பேரூராட்சியின் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு மாலை 6 மணிக்கு தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமதாஸ் தலைமையிலான குழுவினர் மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்(பொறுப்பு) இன்னாசிமுத்து ஆகியோர் சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த பணம் எப்படி வந்தது? என்பது குறித்து இளங்கோ மற்றும் அப்துல்சலாம் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த பணம் பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்டது என்பதும், கொசுமருந்து அடிக்கும் எந்திரம் வாங்கியதில் கமிஷனராக பெற்றதும் தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், இது தொடர்பாக பணம் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதும், அங்கு கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்