எய்ம்ஸ் மருத்துவமனை காலதாமதத்திற்கு தமிழக அரசு இடம் தேர்வு செய்து கொடுக்காததே காரணம்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய காலதாமதத்திற்கு தமிழக அரசு இடம் தேர்வு செய்து கொடுக்காததே காரணம் என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.

Update: 2018-02-15 23:00 GMT
தஞ்சாவூர்,

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். அதற்கு இப்போது வெற்றி கிடைத்து வருகிறது. பாகிஸ்தானில், பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. 2008-ம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைதாகி உள்ளதாக தகவல் வருகிறது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சி தீவிரமாக இருக்கிறது.

பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இதற்கு மாநில அரசுகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு தமிழக மீனவர்கள் யாரும் கொல்லப்படவில்லை. சித்ரவதை சம்பவங்களும் நடைபெறவில்லை. மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். கோவில் சிற்பங்கள், தூண்கள் எல்லாம் பொக்கிஷங்கள். இவற்றை பாதுகாக்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு தூண்கள் சிதில மடைந்துள்ளன. அங்கு தேவையில்லாத கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் கோவில்களின் சுவரை ஒட்டியுள்ள கடைகள் அப்புறப்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. இந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். கடைகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

வியாபாரிகளின் பாதுகாப்பு முக்கியம். அதை விட கோவில்களின் பாதுகாப்பு முக்கியம். கோவில்களை பார்வையிடுவதற்காக எம்.பி.க்கள் அடங்கிய கலாசார குழு தமிழகத்திற்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறேன்.

தஞ்சை வழியாக இயக்கப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்துவது மக்களை பெரிதும் பாதிக்கும். இந்த ரெயிலை தஞ்சை வழியாக தொடர்ந்து இயக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்யும் வகையில் திருச்சி-மயிலாடுதுறை இடையே இணைப்பு ரெயில் இயக்க வேண்டும்.

தமிழக அரசு இடம் தேர்வு செய்து கொடுக்காததே எய்ம்ஸ் மருத்துவமனை காலதாமதத்திற்கு காரணம். மத்திய அரசு மீது பழியை போடாமல் தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று முடிவு செய்து அந்த இடத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தாலும் பா.ஜனதாவுக்கு ஏற்புடையது தான். கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும். கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை பக்தர்களிடம் வழங்க வேண்டும். காவி என்பது புனிதமானது. தியாகத்தை குறிக்கும். காவியை அவமானப்படுத்தினால் தேசிய கொடியை அவமதிப்பதற்கு சமம். தமிழகம் காவிமயமானால் நல்லது தான். அது எங்கள் விருப்பம்.

காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்களது உரிமையை தான் கேட்கிறோம். தமிழகத்திற்குரிய தண்ணீரை தர வேண்டும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் நதிநீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் இளங்கோ, பொதுச் செயலாளர் உமாபதி, செயலாளர் ஜெய்சதீஷ், நகர தலைவர் விநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்