உடன்குடி பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை

உடன்குடி பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-02-15 21:00 GMT
உடன்குடி,

உடன்குடி பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கிடப்பில் போடப்பட்ட பணிகள்


தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களில் உடன்குடியும் ஒன்றாகும். உடன்குடியில் உள்ள பஸ் நிலையம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலானதால் பழுதடைந்த நிலையில் இருந்தது. எனவே பஸ் நிலையத்தை புதுப்பிக்க ரூ.14½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மாதம் பணிகள் தொடங்கியது.

பஸ் நிலைய மேற்கூரையின் முன்பக்க காங்கிரீட் சிலாப்புகளை இடித்து விட்டு, இரும்பு தகடாலான மேற்கூரை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பஸ் நிலைய மேற்கூரையின் முன்பக்க சிமெண்டு சிலாப்புகளை இடித்தனர். பின்னர் அங்கு இரும்பு தகடாலான மேற்கூரை அமைக்காமல், பணியை கிடப்பில் போட்டனர்.

பயணிகள் அவதி

தொடர்ந்து பணிகள் நடைபெறாததால், உடன்குடி பஸ் நிலையம் உருக்குலைந்த நிலையில் உள்ளது. அங்கு பஸ்சுக்காக பயணிகள் வெயிலில் பல மணி நேரம் காத்து கிடக்கும் அவலநிலை உள்ளது.

எனவே பஸ் நிலையம் முழுவதையும் விரைந்து புதுப்பித்து, மேற்கூரை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்