மின்வாரிய ஊழியரின் வீடு புகுந்து 15 பவுன் நகை கொள்ளை

கோபி அருகே மின்வாரிய ஊழியரின் வீடு புகுந்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-02-15 22:15 GMT
கடத்தூர்,

கோபி அருகே உள்ள கும்மிகருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 66). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். அவருடைய மனைவி ராஜாமணி (60). சுப்பிரமணியத்துக்கு ஊரில் 2 வீடுகள் உள்ளன. இதில் முன்பகுதியில் உள்ள வீட்டில் அவர் குடியிருந்து வருகிறார். தான் குடியிருந்து வரும் வீட்டின் பின் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் பீரோ மற்றும் முக்கிய பொருட்களை வைத்துள்ளார். இந்த நிலையில் சுப்பிரமணியம் நேற்று முன்தினம் இரவு முன்பகுதியில் உள்ள வீட்டில் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலை எழுந்ததும் பின்புறத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பார்த்தார்.

அப்போது அந்த வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தங்க சங்கிலி, தங்க வளையல்கள் உள்பட 15 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தன.

வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு அதன் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி சுப்பிரமணியம் சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் ஈரோட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மின்வாரிய ஊழியர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்