திண்டுக்கல் ஏ.எம்.சி.சாலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திண்டுக்கல் ஏ.எம்.சி.சாலையில் போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Update: 2018-02-14 21:30 GMT
திண்டுக்கல்

திண்டுக்கல் காமராஜர் சிலை முதல் ரவுண்டுரோடு வரை ஏ.எம்.சி. சாலை உள்ளது. இந்த சாலை இருவழிப்பாதையாக பயன்பாட்டில் உள்ளது. இதில் காமராஜர் சிலை முதல் பஸ் நிலையம் வரை சாலையின் நடுவே பாதி தூரம் தடுப்பு சுவரும், மீதிதூரம் தடுப்பு கம்பிகளும் வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், இந்த நடைபாதையை சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளனர். இதுதவிர சாலையோர பகுதிகளில் தள்ளுவண்டிகளும், காய்கறிகள் மற்றும் பூக்கடைகளும் உள்ளன. இதனால் நடைபாதையை விட்டுவிட்டு, பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அதேபோல் பஸ் நிலையம் முதல் ரவுண்டுரோடு வரையுள்ள சாலை பகுதிகளிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. இதனால் தினமும் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நகரமைப்பு அலுவலர்கள் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற் காக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகான் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூக்கடைகள், பழக்கடைகள், காய்கறிகள் கடைகள், பெட்டிக்கடைகள் என அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதை பார்த்த தள்ளுவண்டிக்காரர்கள் பலர் வண்டிகளுடன் வேறு பகுதிக்கு சென்று விட்டனர். இதனால் ஏ.எம்.சி.சாலை நேற்று போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவாகாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்