கல்லூரி பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி

சின்னசேலம் அருகே கல்லூரி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-02-14 23:00 GMT
சின்னசேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல். இவரது மகன் மணிவேல்(வயது 23). இவருக்கும், ஆத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி இவர்களது திருமணம் வருகிற 19-ந்தேதி நடைபெற இருந்தது. இதையடுத்து இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மணிவேல் தனது உறவினர் சின்னதுரை(25) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பத்திரிகை வைக்க வந்தார். பின்னர் இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சின்னதுரை ஓட்டினார்.

விருத்தாசலம்-வி.கூட்டுரோடு தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் இருந்து அடரி நோக்கி வந்த தனியார் மகளிர் கல்லூரி பஸ் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணிவேல் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மணிவேலை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிவேலும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான சின்னதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் கல்லூரி பஸ் டிரைவரான தோட்டப்பாடியை சேர்ந்த சுந்தரம்(61) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்