அரசு பஸ் மோதி விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பலி; மனைவி படுகாயம் டிரைவர் கைது

நாகையில், அரசு பஸ் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பலியானார். மேலும், அவரது மனைவி படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-14 22:15 GMT
நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த பாலையூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது55). விவசாயி. இவருடைய மனைவி தேவகி (50). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் பாலையூரில் இருந்து நாகைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நாகை அண்ணாசிலை அருகே சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விவசாயி சாவு

பின்னர் அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அங்கிருந்து ராமதாஸ் தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். தேவகிக்கு திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் கரூர் குளித்தலை பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்தை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்