வெவ்வேறு விபத்துகளில் கோவில் பணியாளர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் கோவில் பணியாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-02-14 22:15 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை அருகே உள்ள நெடுஞ்சேரியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 65). கோவில் பணியாளரான, இவர் வேலை நிமித்தமாக நெடுஞ்சேரியில் இருந்து புதுக்கோட்டை சாலையில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரி சிதம்பரம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சிதம்பரம் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ஈரோடு மாவட்டம் வீரப்பசத்திரத்தை சேர்ந்த ரமேசை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மற்றொரு விபத்து

கீரனூர் அருகே உள்ள வத்தனாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). இவரது தம்பி அன்பு (28). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக வத்தனாக்கோட்டையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தெம்மாவூருக்கு சென்றனர். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை செந்தில்குமார் ஓட்டினார். அன்பு பின்னால் அமர்ந்து வந்தார். கீரனூர் அருகே தெம்மாவூர் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட செந்தில்குமார் படுகாயமடைந்தார். அன்பு லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடையாளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்